Women's day மகளிர் தினத்தின் மதிப்பின் இன்றைய மாற்றங்கள்


கண்ணகி, சீதை, மண்டோதரி, சாவித்திரி முதலிய கற்புக்கரசிகள் போற்றிப் புகழப்பட்ட இந்த பூமியில், இன்று பிரபலமாக இருக்கும் பெண்கள் யார்? (அரசியல்வாதிகளைத் தவிர்த்தால்) திரைப்படத் துறையில் இருப்பவர்களும் மாடலிங் துறையில் இருப்பவர்களுமே பிரபலமாக உள்ளனர். இந்த இரண்டு துறைகளுமே பெரும்பாலும் உடலைக் காட்டி பணம் சம்பாதிக்கும் துறைகளாகவே உள்ளன என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை. இன்றைய சமுதாயத்தில் வளரும் ஆண்கள், பெண்கள் என எல்லாரும் “பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று தப்புக் கணக்குப் போட்டபடியே வளர்கின்றனர். கற்புக்கரசிகளைப் பார்த்து வளர்ந்த சமுதாயம், இன்று யாரைப் பார்த்து வளர்கிறது?

கலி யுகத்தின் தாக்கத்தினால் ஒவ்வொரு நாளும் பண்பாடு சீரழிகிறது. அதிலும் குறிப்பாக, பாலியல் சார்ந்த பண்பாடு வெகு வேகமாக சீரழிந்து வருகிறது. “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்று பெண்கள் நம்பிய காலம் மலையேறி விட்டது. இத்தகு பழமொழிகளை இன்றைய மக்கள் காதில்கூட கேட்பது இல்லை. கட்டிய மனைவியைத் தவிர வேறு யாரையும் நோக்காமல், அவளுக்காகவும் குடும்பத்திற்காகவும் எல்லா சிரமத்தையும் ஏற்று, கண்ணியமாக வாழ்ந்த ஆண்களும் இன்று அரிதாகி விட்டனர். “பிறர் மனை நோக்காமை” என்ற வள்ளுவரின் அத்தியாயத்தை மூச்சுக்கு முந்நூறு முறை “திருக்குறள்,” “தமிழ்” என்று கூறுவோர்கூட படிப்பதே இல்லை.

மனைவியைத் தவிர மற்ற பெண்கள் அனைவரையும் தாயாக மதிக்க வேண்டும் என்பது பண்பாடு. பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு இல்லாமல், “அம்மா” என்று அழைத்து வந்தோம். இன்றோ பெரியவர்களை “ஆன்ட்டி” என்றும் மற்றவர்களை பெயர் சொல்லியும் அழைக்கின்றனர். இதிலேயே நமது பண்பாடு எவ்வாறு சிதைவுற்று இருக்கிறது என்பதை உணரலாம்.

#Women'sDay #march8

Comments

Popular posts from this blog

New Married life surprise